Sunday, October 3, 2010
விமர்சானம்

நல்லவேளை, தியேட்டர் டிக்கெட்டுகளை மைக்ரோ சிப்களாக கொடுக்கவில்லை! மற்றபடி டைட்டிலுக்கு ஏற்றார் போல எந்திரனின் ஒவ்வொரு பிரேமையும் விஞ்ஞானத்தில் முக்கி எடுத்திருக்கிறார் ஷங்கர். ஆவென்று வாய் பிளக்கும் ரசிகனின் தொண்டைக்குள் புகுந்து மூளைக்குள் போய் ஒரு முரட்டு நடனமே ஆடியிருக்கிறது தொழில் நுட்பம். நமது பேட்டரி லோ ஆகிற நேரத்திலெல்லாம் ஐஸ்வர்யாவின் அழகும், ரஜினியின் கம்பீரமும் வந்து சார்ஜ் செய்துவிட்டு போவதுதான் 'எந்திர'ஜாலம்!

பத்தாண்டுகளாக பாடுபட்டு ஒரு ரோபோவை கண்டு பிடிக்கிறார் விஞ்ஞானி ரஜினி. நு£று ராணுவ வீரர்களுக்கு சமமான இந்த எந்திர ரஜினியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்து செயற்கரிய செயல்களை செய்ய வைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் பயிற்சி காலத்தில் அந்த எந்திரன் செய்கிற ரகளையும், காதலும் படைத்தவருக்கே கோபத்தை ஏற்படுத்த, அதனுடைய கையை காலை ஒடித்து குப்பை தொட்டியில் எறிந்து விடுகிறார். அதே நேரத்தில் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியரும் இதே போல ஒரு ரோபோவை கண்டுபிடிக்கிற முயற்சியில் இருக்கிறார் என்பதும் அது பெயிலியர் ஆகிவிட ரஜினி மேல் பொறாமைப்படுகிறார் என்பதும் வில்லத்தனத்திற்கு வழி வகுக்க, குப்பையில் எறியப்படுகிற எந்திர ரஜினி போய் சேருகிறது அந்த பொறாமை புரபசரிடம்!

இதுவரைக்கும் நல்லவனா இருந்த ரோபோவை நான் கெட்டவனாக்குறேன் பார் என்று சவால் விடும் அந்த புரபசர், விரல் அகல சிவப்பு சிப் ஒன்றை அதனுள் செலுத்த, அப்புறம் தமிழ்சினிமாவின் 75 ஆண்டுகால வில்லன்களையும் கலந்து பிசைந்து செய்த மாதிரி கர்ண கொடூர ஆட்டம் போடுகிறது அது! குண்டு மழை பொழியும் ஹெலிகாப்டரையே கூட தனது பீச்சாங் கையால் போட்டு உடைக்கிற அளவுக்கு அபாயகரமான அந்த ரோபோவை எப்படி அழிக்கிறார் விஞ்ஞானி? ஐஸ்வர்யாவை காதலித்த அந்த ரோபோ காதல் தோல்வியிலிருந்து மீண்டதா போன்ற கேள்விகளுக்கான விடைதான் க்ளைமாக்ஸ்.

பஞ்ச் டயலாக் இல்லை. பம்மாத்து அறிமுகம் இல்லை. ஆனாலும் நிமிடத்துக்கு நிமிடம் மிரள வைக்கிறார் ரஜினி. விஞ்ஞானி ரஜினியை விடுங்கள். அந்த ரோபோ ரஜினிதான் அசத்தல். ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய புத்தகத்தை அப்படியே ஒரு விநாடி நேரத்திற்குள் மைண்டில் பதிவு பண்ணிக் கொள்வதும், கேட்கிற கேள்விகளுக்கு டாண் டாண் என்று பதிலடிப்பதுமாக பட்டைய கிளம்புகிறது ரோபோ. டெலிபோன் டைரக்டரியை படித்துவிட்டதாக சொல்லும் அதனிடம் என் போன் நம்பர் என்னன்னு சொல்லு என்று சதாய்க்கும் ஆசாமியிடம் அவரது முகவரியோடு போன் நம்பரையும் புட்டு புட்டு வைக்கிற காட்சி சுவாரஸ்யம்.

எதை பேசினாலும் அதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டு செயல்படுகிற காட்சிகளும் கலகல... கையை பின்புறம் வைத்துக் கொண்டு லஞ்சம் கேட்கும் கான்ஸ்டபிள் 'வெட்டு' என்று கேட்க, பக்கத்திலிருக்கிற கத்தியை எடுத்து ஒரே போடாக போடுகிறாரே, தியேட்டரே வெடிச்சிரிப்பில்!

கோவிலில் ஸ்பீக்கர் கட்டி கூத்தடிக்கும் வேறொரு கும்பலை 'நிராயுதபாணி'யாக்குகிற காட்சியில் ரோபோவை வேப்பிலை அடிக்காத குறையாக பக்தியழுக பார்க்கும் பெண்மணிகளும், ரஜினியின் 'ஆத்தா கோலமும்' கூட அதிர வைக்கிறது தியேட்டரை. அந்த ரயில் சண்டை வினாடிக்கு வினாடி பிரமிப்பு. பிரசவ வார்டிலும் கூட ரோபோவின் கருணை டச்சோ டச்! தலை திரும்பிய குழந்தையை பக்குவமாக திருப்பி பாதுகாப்பாக நார்மல் டெலிவரியாக்குகிற காட்சிகள் சென்ட்டிமென்ட் மேளா.

உயிர் கிடையாது. வலி கிடையாது. உணர்ச்சிகள் கிடையாது என்றிருக்கும் ரோபோவை உணர்ச்சிக்குள்ளாக்கும் விஞ்ஞானி தனது காதலி ஐஸ்வர்யாராயை இழந்துவிடுமோ என்று அஞ்சுகிற போதுதான் கதையிலும் ஒரு டர்னிங்!

ஐஸ்வர்யா ராய் இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதுதான் இன்னொரு விஞ்ஞான அதிசயம். புருவம், நெற்றி, உதடு என்று ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார் ரஜினி. அது அத்தனையும் சரி என்பது போலவே இருக்கிறார் ஐஸ். நீ ஒரு மிஷின். நான் ஒரு மனுஷி. இரண்டு பேரும் காதலிக்க முடியாது என்று விளக்கி புரிய வைக்க துடிக்கும் போதெல்லாம் அவரது கண்களும் கூட கூட பேசுகிறதே, அதற்கே தனி புத்தகம் போடலாம்.

அப்புறமாகவும் ஒரு ரோபோ ரஜினி வருகிறார். அது சாட்சாத் ராட்சசன். தரையை ஒரு காலால் ஓங்கி உதைத்து ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே... பயங்கரம்ப்பா. ஒரு ரோபோ இன்னொரு ரோபோவை செய்ய, அந்த ரெண்டும் இன்னும் ரெண்டை உருவாக்க, அந்த ஏரியா முழுக்க ரஜினி ரஜினியாய் ரோபோக்கள். அதே கெட்டப்பில் விஞ்ஞானியும் உள்ளே நுழைந்துவிடுகிறாரா, எந்த நேரத்தில் ரகசியம் உடையுமோ என்று நகம் கடிக்க விடுகிறார் டைரக்டர். ஒரு சொட்டு ரத்தத்தை வைத்து கண்டுபிடித்துவிடுகிற வில்லன் ரோபோ ஆடுகிற பேயாட்டம் கிராபிக்ஸ்தான் என்றாலும் ஹாலிவுட் தரத்திற்கு நிச்சயம் குறைந்ததல்ல!

சொல்ல மறந்தாச்சு. இந்த படத்தில் சந்தானமும் கருணாசும் கூட நடித்திருக்கிறார்கள். காஸ்ட்லி சம்பளம் வாங்கிய 'வேஸ்ட்'லி நடிகர்கள்!

தொழில் நுட்பத்தை எழில் நுட்பம் ஆக்கியிருக்கிறார்கள் கிராபிக்ஸ் கலைஞர்கள். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உழைப்புக்கு தனி மெடலே குத்தலாம். இசைப்புயல் ரஹ்மானுக்கு ரசிகர்களின் 'வசை'ப்புயல் நிச்சயம். கிளிமஞ்சாரோ தவிர மற்றவை வெகு வெகு சுமார்.
ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் சிறப்பு சப்தம், குறிப்பாக ரோபோவின் வாய்ஸ் கிரேட்! சண்டை காட்சிகள் பீட்டர் ஹெய்னின் கைங்கர்யம். ரஜினியை ஒரு நடமாடும் லாஞ்சராகவே ஆக்கியிருக்கிறார் ஹெய்ன்!

தனது வழக்கமான அட்வைஸ்களை இந்த படத்தில் கை விட்டிருந்தாலும் ஒரு காட்சியில் ஒரு வினாடியில் உணர வைத்திருக்கிறார் ஷங்கர். ஓடும் ரயிலில் வாசலில் நின்று பான் பராக் துப்ப முயலும் ஒருவனின் முகத்தில் கால் வைத்து பறக்கிறார் ரஜினி.

க்ளைமாக்சில் உணர்ச்சியில்லாத ஒரு எந்திரம், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க வைக்கிறது ரசிகர்களை! அதுதான் ஷங்கரின் வெற்றியும்!


பெரம்பலூர் திரை அரங்குகளில் முதல் நாள் எந்திர

கொண்டாட்டங்களின்

தொகுப்பு